L. Murugan Contest for Rajya Sabha from Madhya Pradesh

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கானதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisment

அதே சமயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அதில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

Advertisment

மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான எல். முருகன் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடைய உள்ளது. இத்தகையை சூழலில் மத்தியப்பிரதேசமாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் இருந்து எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய ரயில்வே அமைச்சராக இருக்கும் அஷ்வினி குமார் வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.