Skip to main content

எலான் மஸ்க்கின் புகைப்படத்திற்கு பூஜை; வைரலாகும் வீடியோ

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Kudos to Elon Musk's photo

 

எலான் மஸ்க்கின் புகைப்படத்தை வைத்து ஆண்களுக்கு ஆதரவான அமைப்பினர் பூஜை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

 

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் எந்த அளவுக்கு புகழ்பெற்றவரோ அதே அளவு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர் எப்போதும் மக்கள் மத்தியில் பேசப்படும் நபராகவே கருதப்படுவார். உக்ரைன் போரின்போது ரஷ்ய அதிபர் புதினை சண்டைக்கு அழைத்தது; உடனே தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி ஆதரவு தெரிவித்தது. கொரோனா குறித்து திகில் கருத்து கூறியது என பணத்தோடு சேர்ந்து ஏகப்பட்ட எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார் எலான் மஸ்க்.

 

இப்படி ட்விட்டரில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்த எலான் மஸ்க், திடீரென 44 பில்லியன் டாலருக்கு அந்த ட்விட்டர் நிறுவனத்தையே வாங்கினார். அதன்பிறகு அதிகமான இந்தியர்கள் ட்விட்டரிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். முன்னாள் ட்விட்டர் சிஇஓ அகர்வால் உள்ளிட்ட பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். எலான் மஸ்க்கின் இத்தகைய செயல்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், பெங்களூரில் உள்ள ‘சேவ் இந்தியா ஃபேமிலி ஃபவுண்டேஷன்’(save india family foundation) என்கிற அமைப்பு, எலான் மஸ்க்கிற்கு பேனர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எலான் மஸ்க்கின் புகைப்படத்தை வைத்து பூஜையும் செய்துள்ளனர். 

 

பொதுவாக, இந்த அமைப்பு என்பது ஆண்களுக்கு ஆதரவான அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஆண்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பெண்களைக் கண்டித்தும் பல்வேறு பதிவுகளைப் போடுவார்கள். இது கடந்த காலத்தில் அத்தகைய பதிவுகள் அனைத்தும் தடை செய்யப்படும். ஆனால், தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு ஆண்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்க் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிறகும் ஆண் ஆர்வலர்களின் பதிவுகளைத் தடை செய்யவில்லை. இதையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எலான் மஸ்க்கின் புகைப்படத்திற்கு ஊது பத்திகள் ஏற்றி மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யும் வீடியோ காட்சி சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

 

- சிவாஜி

 

சார்ந்த செய்திகள்

Next Story

 எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Elon Musk's visit is suddenly canceled!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, எலான் மஸ்க் நாளை (21-04-24) இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த பயணம் திடீரென ரத்தாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை புரிவதை தாமதப்படுத்த்தியுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.