Kolkata RG Kar Hospital Female Practitioner incident CBI investigate

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன், அரை நிர்வாணமாகக் கிடந்த பயிற்சி மருத்துவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் சஞ்சய் ராய் என்றவர் கைது செய்யப்பட்டார். மேலும் மருத்துவ மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Advertisment

Kolkata RG Kar Hospital Female Practitioner incident CBI investigate

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று (13.08.2024) சுமார் 4 மணி நேரம் வரை விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாகத் தலைமை நீதிபதி கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை இன்று (14.08.2024) காலை சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர். இந்நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர். இந்த குழுவில் சிறப்பு மருத்துவர்கள் குழு, சிறப்புத் தடயவியல் குழுவினரும் அடங்கியுள்ளனர்.

Advertisment