Skip to main content

“ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” - அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Kharge's letter to Amit Shah about Rahul Gandhi's safety must be ensure

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளைக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட தற்போது அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுஹாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவுஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில்,  “இந்திய மக்களிடம் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை கொண்டு சேர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த `14ஆம் தேதி ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 18ஆம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை அசாம் மாநிலத்திற்குள் நுழைந்ததில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. 

Kharge's letter to Amit Shah about Rahul Gandhi's safety must be ensure

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்புக்கு பா.ஜ.க தொண்டர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். அனைத்து இடையூறுகளுக்கும் மத்தியில் ராகுல் காந்தி திட்டமிட்டபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். எனவே, மத்திய உள்துறை அமைச்சர், ராகுல் காந்தி மற்றும் யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், இது குறித்து அசாம் முதல்வர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி.க்கு அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்