Skip to main content

“தாலி பற்றிப் பேசும் மோடி, மேக் இன் இந்தியா பற்றிப் பேசாதது ஏன்?” - கார்கே கேள்வி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Kharge question Modi, who talks about Thali, why doesn't he talk about Make in India?

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்வேறு தொகுதிகளில் முதல் ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதி கட்டத் தேர்தலானது வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, இந்தியாவில் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக, 2023-2024ஆம் ஆண்டில் சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதை காட்டிலும், அங்கிருந்து அதிக அளவில் இறக்குமதிகள் செய்யப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தரவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வர்த்தக வளர்ச்சி தொடர்பான தரவுகளை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மோடி தாலி, மட்டன், முகலாயர் மற்றும் முஜ்ரா பற்றி பேசுகிறார். ஆனால், அவர் ‘மேக் இன் இந்தியா; பற்றி பேசவில்லை. மோடி தனது பல தேர்தல் பிரச்சாரத்தில், பொருளாதாரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? ஏனென்றால், அவரது அரசாங்கத்தின் மோசமான தோல்வியில் உள்ளது.

மேக் இன் இந்தியா மற்றும் பிஎல்ஐ திட்டம் தோல்வியடைந்தது. ஏற்றுமதிகள் வீழ்ச்சியில் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2004-2014 ஆண்டுகளில் 7.85 சதவீதமான உற்பத்தி வளர்ச்சி இருந்துள்ளது. ஆனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2014-2022ஆம் ஆண்டுகளில் 6.0 சதவீதம் தான் வளர்ச்சி இருந்திருக்கிறது. அதே போல், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியைப் பொறுத்த அளவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2004-2010ஆம் ஆண்டுகளில் 186.59 சதவீதமாகவும், 2009-2010 ஆண்டு வரையிலான ஆட்சியில் 94.39 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், 2014-2020 மற்றும் 2019-2024 எனத் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 21.14 சதவீதமாகவும், 56.86 சதவீதமாகவும் தான் ஏற்றுமதி வளர்ச்சி இருந்திருக்கிறது. 

செயலிகள் தடை மற்றும் போலி தேசியவாதம் இருந்தபோதிலும், சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதை மோடி உறுதி செய்தார். கடந்த ஆண்டு மட்டும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்கும், இந்தியாவின் ஏற்றுமதிக்கும் இடையே ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக வித்தியாசப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 194.19% அதிகரித்துள்ளது. பயாலஜிகலாக அவர் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று மோடி கூறுகிறார். நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், பாஜகவை வெளியேற்றிவிட்டு இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கமல்ஹாசன் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களைக் குறை கூறுகிறார்” - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
JP Nadda alleges Kamal Haasan for kallakurichi issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் மெளனம் காத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் 56 பேர் உயிரிழந்து, 159 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளின் கொடூரமான காட்சிகள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.  மல்லிகார்ஜுன கார்கே, கருணாபுரத்தில் பட்டியலின சாதியினர் அதிகம் வசிக்கின்றனர் என்று  உங்களுக்குத் தெரியும்.  அவர்கள் தமிழ்நாட்டில் வறுமை மற்றும் பாகுபாடு காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

இவ்வளவு பெரிய பேரழிவு வெளிச்சத்திற்கு வந்தபோதும், உங்கள் தலைமையிலான காங்கிரஸ், இது குறித்து மௌனம் காத்து வருவதைக் கண்டு, ​​​​நான் அதிர்ச்சியடைந்தேன். சிபிஐ விசாரணைக்குச் செல்லவும்,  அமைச்சர் எஸ். முத்துசாமியை அவரது பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்வதையும், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க-இந்தியா கூட்டணி அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.    

இன்று நீங்கள் நியாயமாக நடக்க வேண்டிய நேரம் இது. இன்று தமிழக மக்களும், ஒட்டுமொத்த பட்டியலின சமூகமும் சாட்சியாக உள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்களின் இரட்டை பேச்சு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் நீது மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி குறை கூறுகிறார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினையில் குரல் எழுப்புவதற்கு தைரியத்தை ஒருங்கிணைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.