Skip to main content

"அரசியல் இல்லை; இது சினிமா"- 'பீஸ்ட்' படம் குறித்து கே.ஜி.எஃப். ஹீரோ யஷ்!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

 

கடந்த 2018- ஆம் ஆண்டு, யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம், இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்திய சினிமா ரசிகர்களால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது படக்குழு. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

இந்த நிலையில், கே.ஜி.எஃப்.- 2 படம் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும், அதற்கான ட்ரெய்லர் இன்று (27/03/2022) மாலை 06.40 மணிக்கு வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

கே.ஜி.எஃப்.- 2 படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரானது 2 நிமிடங்கள் 56 வினாடிகளை கொண்டது. யூடியூப் பக்கத்தில் வெளியான தமிழ் மொழி ட்ரெய்லரை, சில மணி நேரத்திலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கை  20 லட்சத்தைக் கடந்துள்ளது. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

இதனிடையே, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இன்று (27/03/2022) மாலை 06.00 மணிக்கு கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் உங்கள் படமும் வெளியாகவுள்ளது, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? போட்டி எப்படி இருக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் யஷ், "கே.ஜி.எஃப். Vs பீஸ்ட் என்று நினைக்கவில்லை; கே.ஜி.எஃப். அண்ட் பீஸ்ட் என்று நினைக்கிறேன். தேர்தலில் தான் ஒருவருக்கு ஒரு ஓட்டு இருக்கும். அதிக ஓட்டு யாருக்கு விழுகிறதோ அவர்கள் ஜெயிப்பார்கள். மற்றவர்கள் தோல்வி அடைவார்கள். இது அரசியல் கிடையாது; சினிமா. இதில் ஒருவருக்கு ஒரு ஓட்டு கிடையாது; இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும். விஜய் மீது எனக்கு மதிப்பு உள்ளது. நானும் விஜய் படம் பார்ப்பேன். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு; போராட்டத்தில் குதித்த விவசாய சங்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Denial of entry for wearing a vest in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், நேற்று முன்தினம் (16-07-24) பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார். 

ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பகீரப்பாவும், அவரது மகனும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனாலும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்தததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது, ‘வேட்டி அணிந்து வந்த விவசாயி வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். 

Next Story

பள்ளி புத்தகத்தில் தமன்னா குறித்து பாடம்; கொந்தளித்த பெற்றோர்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
A lesson on Tamannaah in the school curriculum in bangalore

தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, 15 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தமன்னாவைப் பற்றி பள்ளி பாடப்புத்தக்கத்தில் சேர்க்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஹெப்பால் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிந்தி மக்களின் வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் தமன்னாவைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. 

இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியவர, இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.