மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள பட்ஜெட் உரையின் முகப்பில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஓவியம் அச்சிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தை கேரள அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கலுக்காக, பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்ஜெட் உரையின் முகப்பில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், "நிச்சயமாக இது எங்களின் அரசியல் நிலைப்பாட்டை காட்டுகிறது. இது கேரள கலைஞர் ஒருவர் வரைந்த மகாத்மா காந்தி கொலை செய்யப்பதன் ஓவியம். காந்தியை யார் கொலை செய்தார்கள் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம் என்ற செய்தியை இதன் மூலம் தெரிவிக்கிறோம். நாட்டின் சில பிரபலமான நினைவுகளை அழிக்கவும், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் மக்களை இனங்களின் அடிப்படையில் பிரிக்கவும் முயற்சி நடக்கிறது. இதனை எதிர்த்து கேரளா ஒற்றுமையாக நிற்கும்" என தெரிவித்துள்ளார்.