குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல பாஜக சார்பில் நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளும், விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதில் குறிப்பாக கேரள மாநில சட்டசபை கூட்டத்தில், இந்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா சார்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குடியுரசு தினமான நேற்று கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பிரம்மாண்ட மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. கேரளாவின் வடக்கு எல்லை பகுதியான காசர்கோடு முதல் தெற்கில் உள்ள களியக்காவிளை வரை 620 கி.மீ. தூரத்துக்கு மக்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் கலந்துகொண்டார்.