Skip to main content

"சடலத்துடன் உறவு கொண்டவரை தண்டிக்க முடியாது" - உயர்நீதிமன்றம் அதிரடி

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

karnataka high court judgement for young woman incident

 

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 22). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கடத்தி சென்று கொலை செய்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும் பிணத்துடன் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

இந்த தண்டனையை எதிர்த்து ரங்கராஜ் தரப்பில் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் இளம்பெண்ணை கொலை செய்த குற்றத்திற்கு ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் சடலத்துடன் உறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தெரிவிக்கையில், "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பெண்ணின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகுமா இல்லையா எனும்போது சட்டப்படி ஒரு இறந்த உடலை மனிதராக கருத முடியாது. அதனால் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 375 மற்றும் 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை இந்த குற்றத்திற்கு பொருந்தாது. மேலும் 376-வது சட்டப்பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. அதனால் இறந்து போன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்" என தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.