/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gfjgj.jpg)
உத்தரப்பிரதேசத்தில் செய்யப்பட்டது போலப் பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், புலிகேஷி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் மதரீதியிலான விமர்சனம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சமூக வலைத்தள பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூடிய ஒரு கும்பல் எம்.எல்.ஏ.வின் வீட்டை தாக்கியதோடு வாகனங்களுக்கும் தீ வைத்தது. சம்பவம் அறிந்து இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். டி.ஜே. ஹள்ளி, கே.ஜே.ஹள்ளி எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட நிலையில், இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகினர். அதேபோல் போலீஸ் காவல் ஆணையர் உட்பட 60 பேர் இந்த கலவர சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய பதிவினையிட்ட எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கலவரத்தில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில், உத்தரப்பிரதேசத்தில் செய்யப்பட்டது போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் இருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்போவதாகக் கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "பெங்களூருவில் நடந்த கலவரம் திட்டமிட்டே நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு, கற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். 300 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. விசாரணை முழுமையாக நடந்த பிறகே உண்மைதெரிய வரும். உத்தரப்பிரதேசத்தை போலவே கலவரம் செய்தவர்களிடம் இருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)