/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fdfdf_1.jpg)
மூன்று ரூபாய்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விவசாயி ஒருவரை சுமார் 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம் பருவே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லஷ்மி நாராயணன், நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ 35 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றிருந்தார். இதில், ரூ. 32,000 அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 3,000 ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு அவர் வங்கியில் செலுத்தியிருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் லஷ்மி நாராயணனைத் தொடர்புகொண்ட வங்கி அதிகாரிகள், மீதமுள்ள கடன் தொகை குறித்துப் பேசுவதற்காக அவரை உடனே வங்கிக்கு வரச்சொல்லியுள்ளனர். ஏற்கனவே கடன் அனைத்தையும் செலுத்திவிட்டதால் குழப்பமடைந்த அவர், அதிகாரிகள் வற்புறுத்தலால் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், பொது முடக்கம் காரணமாகப் பேருந்து சேவை இல்லாததால், தனது வீட்டிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே வங்கிக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று விசாரிக்கையில் அவர் செலுத்த வேண்டிய தொகை 3 ரூபாய் 46 பைசாவை உடனே செலுத்தவேண்டும் எனக் கேட்டு அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "வங்கியிலிருந்து போன் செய்து உடனே வருமாறு கூறினார்கள். அதனால், அச்சமடைந்தேன். ஊரடங்கு காரணமாகப் பேருந்து சேவை எதுவும் இல்லை. என்னிடம் சைக்கிள் கூட இல்லை. எனவே நடந்தே வங்கிக்கு வந்தேன். இங்கு வந்து பார்த்ததும் நான் கட்ட வேண்டிய தொகை 3 ரூபாய், 46 பைசாக்கள் என்று தெரிவித்தார்கள். வங்கியின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்னைக்காயப்படுத்திவிட்டது" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் பிங்வா பேசுகையில், "தணிக்கை நடந்து கொண்டிருந்ததால், அவரது கடன் கணக்கை முடிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் 3 ரூபாய், 46 பைசா பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், அவருடைய கையெழுத்தும் தேவைப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)