Skip to main content

ஊரடங்கை மீறி மேகதாது அணைக்காக பாத யாத்திரை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் முடிவு!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

SHIVAKUMAR

 

காவிரியின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகவுள்ளது. இதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவில் அமல்படுத்தகோரி 168 கிலோமீட்டருக்கு பாத யாத்திரை நடத்தப்போவதாக அண்மையில் அறிவித்தார்.

 

இந்தநிலையில் கர்நாடக அரசு, வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தனது பாத யாத்திரையை நடத்த கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முடிவு செய்துள்ளார். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பாத யாத்திரையை நடத்தப்போவது குறித்து பேசியுள்ள அவர், கர்நாடகாவில் கரோனாவே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: கரோனா எங்கே இருக்கிறது? கரோனாவே இல்லை. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எங்களது பாதயாத்திரையை சீர்குலைக்கவும் அரசாங்கம் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மோசடி செய்கிறது. பெங்களூர் நகரிலும் பிற மாவட்டங்களிலும் நிகழும் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தங்களுக்கு அர்ப்பணிப்பு இல்லாததை எங்கள் பாதயாத்திரை வெளிப்படுத்தும் என்று ஆளும் பாஜக அஞ்சுகிறது. மேகதாது திட்டம் மூலம் 2.5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து அதை நனவாக்கவே நாங்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறோம். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது பாஜகவின் அரசியல் இல்லையா?

 

நான்  கரோனா நோயாளிகளின் பட்டியலையும் கரோனாவால் இறந்தவர்களின் பட்டியலையும் கேட்டேன், ஆனால் அரசாங்கம் அதை வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும் வெளிவரும் இந்த பாதிப்பு எண்ணிக்கைகளை நான் நம்பவில்லை. நாங்கள் பல மாவட்டங்களில் சோதனையை நடத்தினோம். நாங்கள் கண்டறிந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசாங்கம் வெளியிடும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தவில்லை. சில மரணங்கள் வேறு காரணத்தால் ஏற்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எந்தவொரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலும் ஒரு கரோனா நோயாளி கூட இல்லை என்பதைக் கண்டறிந்தோம். மேலும் இதுதொடர்பான விவரங்களை வெளியிட விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவேன். கரோனா விஷயத்தில் அரசாங்கம் இவ்வளவு தீவிரமாக இருந்தால், சட்டசபையில் அரசின் அனைத்து ஆதரவாளர்களுடன் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மேலவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது எப்படி?.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து வருகிறது” - செல்வப்பெருந்தகை

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Undeclared Emergency has been going on in India for last 10 years says Selvaperunthagai

திண்டுக்கல்லில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பேகம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு நாகல் நகர் மேம்பாலம் அருகே மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் தலைமையில் ஆள் உயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கைராஜா உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

அதன்பின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு மாநகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து மாநிலத் தலைவர் பல கருத்துக்களை கேட்டார். அதற்குமுன் பத்திரிக்கையாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசும்போது, “தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்தரவின்பேரில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் தோறும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு ஏதேனும் மாற்றம் செய்ய இருந்தால் அதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும். கிராமம், நகரம், ஒன்றியம் என எவ்வித பாரபட்சமின்றி அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்கப்படும். பகுஜன சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புலன் விசாரணை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று கூட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் யார் சம்மந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வேறு எதுவும் சொல்லக்கூடாது மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற போது கூட கோட்சே குறித்து காங்கிரஸ் எவ்வித தவறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதேபோல சாவர்க்கர் குறித்தும் தவறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. பா.ஜ.க தலைவர்கள், நிர்வாகிகள் இறந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி வருகின்றனர். எமர்ஜென்சி என்பது இந்திராகாந்தி காலத்தில் அதிகாரிகள் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்டது. அது தவறான பாதையில் சென்றதால் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி நடந்து வருகிறது. 

மின் கட்டண உயர்விற்கு உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டதே காரணமாகும். ஜெயலலிதா இருந்தவரை இந்த திட்டத்தில் அவர் சேரவில்லை. ஆனால் அவா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தில்  சேர்ந்தார். அதனால் தான் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா அரசு மதிக்காமல் செயல்படுகிறது. 40 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க வேண்டிய மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது என்பதற்காக தமிழக மக்களின் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழக மக்களுக்காக காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசைக் கண்டித்தும், போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு; போராட்டத்தில் குதித்த விவசாய சங்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Denial of entry for wearing a vest in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், நேற்று முன்தினம் (16-07-24) பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார். 

ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பகீரப்பாவும், அவரது மகனும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனாலும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்தததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது, ‘வேட்டி அணிந்து வந்த விவசாயி வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.