பிரபல ரவுடியைப் பிடிக்கச்சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எட்டு போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தின் சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திக்ரு கிராமத்தில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள விகாஸ் துப்பே என்ற அந்த ரவுடியைப் பிடிக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவு டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், ஐந்து காவலர்கள் என ஒரு மிகப்பெரிய குழு அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
போலீஸார் அந்தக் கிராமத்துக்குள் நுழைய முடியாதவகையில் வழியெங்கும் பல்வேறு தடுப்புகளை உருவாக்கி வைத்திருந்த ரவுடிகள், அத்தனையும் மீறி கிராமத்திற்குள் நுழைந்த போலீஸார் மீது ஒரு வீட்டின் மாடியில் பதுங்கி இருந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைச் சற்றும் எதிர்பாராத போலீஸார், சுதாரிப்பதற்குள் டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், நான்கு காவலர்கள் என எட்டு பேர் ரவுடிகளால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து, உடனடியாக பக்கத்து மாவட்டமான கன்னூஜ் மாவட்டத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த ரவுடிகள் தப்பிச் சென்றுள்ளனர். சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பிய ரவுடிகளைப் பிடிக்கச் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக உ.பி. போலீஸ் டி.ஜி.பி. ஹெச்.சி.அஸ்வதி தெரிவித்துள்ளார்.