JP Nadda says Prime Minister Modi has changed the political culture by delivering on promises

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

Advertisment

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா, அசோக் கெலாட் ஆட்சியையும்காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

Advertisment

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜே.பி. நட்டா, “அசோக் கெலாட் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 3,000 பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகி உள்ளது. அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தை சீர்குலைத்துவிட்டார்.பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவில் ராஜஸ்தான் மாநிலம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது என்று தேசியப் பதிவு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) கூறுகிறது.

பல ஆண்டுக் காலமாக இந்த நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அவர்கள் தேர்தல் நேரத்தில் ஒரு வாக்குறுதியை அளிப்பார்கள். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு அடுத்த தேர்தலில் மீண்டும் ஒரு வாக்குறுதியை அளிப்பார்கள். இதை காங்கிரஸ் ஒரு அரசியல் கலாச்சாரமாகவே மாற்றி வைத்திருந்தது. ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்குப்பிறகு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி மீண்டும் உங்கள் முன் வந்திருக்கிறோம். இதன் மூலம், காங்கிரஸ் உருவாக்கிய அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்” என்று கூறினார்.