Skip to main content

“தேநீர், சமோசாக்களுக்காக மட்டுமே இந்தியா கூட்டணியின் சந்திப்புகள் இருக்கும்...” - ஜனதா தள எம்.பி. பரபரப்பு பேச்சு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Janata Dal MP says India Alliance meetings are only for tea and samosas" -

 

அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதற்கிடையே, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போடப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்தில் ஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

இதனையடுத்து, 4 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (06-12-23) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டார். 

 

அதில் 17 கட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் டிசம்பர் 3வது வாரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யான சுனில் குமார் பிண்டு, இந்தியா கூட்டணி சார்பாக கூடிய கூட்டங்கள் எல்லாம் ‘தேநீர், சமோசாக்களுக்கு’ மட்டுமே நடக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி. சுனில் குமார் பிண்டு, “மோடி மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனைத்தான் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை மற்றும் மோடியின் உத்தரவாதத்தில் பொதுமக்கள் முழு நம்பிக்கை வைத்திருப்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. நாம் மக்களின் விருப்பங்களை புரிந்துகொண்டு பரீசிலிக்க வேண்டும். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், என்னை எப்போது வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யலாம். 

 

மாநிலங்களில் யாருடைய பலத்தில் நிற்கிறதோ அந்த மக்களை புறக்கணிப்பதுதான் காங்கிரஸின் வேலை. பீகாரின் ஜே.டி.யூ, உத்தரப் பிரதேசத்தில் எஸ்.பி. கட்சி, ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆகிய அனைவரும் காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டனர். அதன் விளைவாகத்தான் 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பிராந்திய கட்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிர்காலம் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக தொகுதி பங்கீடு குறித்த விவாதம் நடைபெறும் வரை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கூட்டங்கள் அனைத்தும் தேநீர் மற்றும் சமோசாக்களுக்கு மட்டுமே நடக்கும்” என்று கூறியுள்ளார். கட்சியில் இருந்து கொண்டு மோடியை பாராட்டி பேசிய சுனில் குமார் பிண்டுவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனதா தள கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்