jammu kashmir ddc election results

ஜம்மு காஷ்மீரில் நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பி.ஏ.ஜி.டி கூட்டணி அதிக இடங்களைப் பிடித்துள்ளது.

Advertisment

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடைபெற்ற இந்த தேர்தல், தேசிய அளவில் அதிக கவனம் பெற்றது. 280 இடங்களை கொண்ட மாவட்ட வளர்ச்சிமன்ற கவுன்சிலுக்கு நடந்த இந்த தேர்தல் நவம்பர் 28 முதல் டிசம்பர் 19 வரை எட்டு கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு நேற்று 276 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், ஏழு கட்சிகளை கொண்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (பி.ஏ.ஜி.டி) 110 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 74 இடங்களைக் கைப்பற்றிய பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சுயேச்சைகள் 49 இடங்களிலும், காங்கிரஸ் 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, ஆப்னி கட்சிக்கு 12 இடங்களிலும், மக்கள் ஜனநாயக முன்னணி, தேசிய சிறுத்தைகள் கட்சிதலா 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

கடந்த 2014 தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியிருந்த பாஜக, இம்முறை 50 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இந்த சீட் எண்ணிக்கைகளில் அடிப்படையில், பாஜக பலம்வாய்ந்ததாக இருக்கும் ஜம்முவில் 10 மாவட்ட மன்றங்களில் ஆறு இடங்களை இக்கட்சி கைப்பற்றியுள்ளது. அதேநேரம் காஷ்மீரில் 10 மாவட்ட மன்றங்களில் ஒன்பது இடங்களை பிஏஜிடி கைப்பற்றியுள்ளது. இதுதவிர, ஜம்முவில் நான்கு மாவட்டங்களையும் காஷ்மீரில் ஒரு மாவட்டத்தையும் சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளின்படி, ஜம்முவின் பல இடங்களில் கடந்த முறையை ஒப்பிடும்போது பாஜகவின் வாக்குவங்கி சரிந்துள்ளது. அதேநேரம் கடந்த முறை குறைவான வாக்குகளைப் பெற்றிருந்த காஷ்மீரில் பாஜகவின் வாக்குவங்கி உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.