ஜம்மு- காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
ரம்பன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், சாலைகள் மட்டுமின்றி மரங்கள், செடி, கொடிகள் என அனைத்திலும் வெண்பனி படர்ந்து காட்சி அளிக்கிறது. சாலைகளில் சுமார் 1 அடிக்கு மேல் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன.
மோசமான பனிப்பொழிவின் காரணமாக, வெளியே வர முடியாமல், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். புகழ்பெற்ற வைஷ்ண தேவி கோயில் பனியால் சூழப்பட்டுள்ளது. பாராமுல்லா பகுதியில் கொட்டும் பனிப்பொழிவிலும் சுகாதாரப் பணியாளர்கள் மக்களைத் தேடி சென்று, கரோனா தடுப்பூசிப் போடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ராணுவ வீரர்கள் பனியை அகற்றி பாதையை ஏற்படுத்தி உதவிபுரிந்தனர்.