Skip to main content

தீவிரவாதிகள் தாக்குதல்; ஜம்மு - காஷ்மீரில் பதற்றம்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Jammu and Kashmir Doda District incident

ஜம்மு - காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று (12.06.2024) இரவு 08.20 மணியளவில், கோட்டா டாப், காண்டோ, தோடாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் பாதுகாப்புப்படையினர் 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் தன்வீர் கூறுகையில், “பாதுகாப்புப் படையினருக்குத் துப்பாக்கி குண்டு பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உடல்நிலை நிலையாக உள்ளார். மார்பு மற்றும் காலில் குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதே சமயம் இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஓ.ஜி. கான்ஸ்டபிள் பரீத் அகமது மேல் சிகிச்சைக்காகத் தோடா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த மோதலுக்குப் பிறகு தோடாவின் தாத்ரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. 

Jammu and Kashmir Doda District incident

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே ரீசி மற்றும் கத்துவா பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 1 வாரத்தில் 4 முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதால் அங்குப் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கத்துவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர். பிரதமர் மோடி 3 முறையாகப் பிரமராகப் பதவியேற்ற கடந்த 9 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் கொண்டிருந்த மினி பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில்10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பதேர்வா, தாத்ரி மற்றும் காண்டோவின் மேல் பகுதிகளில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு பயங்கரவாதிகளின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்குத்  தலா 5 லட்சம் வீதம் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதே சமயம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்