பீகார் மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கு முன்பு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து பீகாரை ஆட்சி செய்துவந்தனர். அப்போது முதல்வராக நிதிஷ்குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வந்தனர்.
இந்த சூழலில் தான் நிதிஷ்குமார் பாஜகவிற்கு எதிராக இந்தியளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கினார். அதில்தான் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் இருந்துவந்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. அதேசமயம் நிதிஷ்குமார், மாநில அளவிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் முதல்வரானார். இதையடுத்து தேஜஸ்வி யாதவின் துணை முதல்வர் பதவி பறிபோன நிலையில் அரசு பங்களாவையும் காலி செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து தேஜஸ்வி காலி செய்த அரசு பங்களாவிலும் குடியேறவுள்ளார். அதனால் வீட்டைச் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியது. ஆனால், வீட்டைச் சுத்தம் செய்ய சென்றபோது, ஏசி, சோபா, கட்டில், ஃபிரிட்ஜ், நாற்காலிகள், கணினிகள், மெத்தைகள் திருடு போயுள்ளன என சாம்ராட் சவுத்ரியின் தனிச்செயலாளர் சத்ருகன் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் திருடுபோனதற்கு தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிதான் காரணம் என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் எதிர்வினையாற்றிவருகின்றனர்.