Skip to main content

''பாரத மாதாவை அவமதித்தது மன்னிக்க முடியாதது'' - மோடி பேச்சு 

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

"Insulting Bharat Mata is unforgivable" - Modi speech

 

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

 

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. நேற்று மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேற்று பதிலளித்துப் பேசினர்.

 

இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி பதிலளித்து பேசுகையில், ''எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு துளி கூட அக்கறை இல்லை. 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்கள் கொண்டு வந்துவிட்டனர்.நாட்டுக்கு நீங்கள் ஏமாற்றத்தை தவிர வேறு எதையும் தரவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது முதல் நாளில் ராகுல் காந்தி பேசாதது ஏன்? ஊழல் இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.'' என்றார் .

 

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய பிரதமர் மோடி மணிப்பூர் என்ற பெயரை உச்சரிக்காத நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமரை நோக்கி ''மணிப்பூர்... மணிப்பூர்...'' எனக் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அதன் பிறகு பேசிய பிரதமர் மோடி, ''மணிப்பூர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்போம். மணிப்பூர் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்திய நாடும் மக்களும் துணையாக உள்ளார்கள். 1966 மிசோரமில் வான்வழித் தாக்குதல் நடத்தியது காங்கிரஸ் ஆட்சி. பாரத மாதாவை அவமதித்து பேசியது மன்னிக்க முடியாதது (பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள் என ராகுல் பேசியதைக் குறிப்பிட்டு) தமிழ்நாட்டில் பாரத மாதாவுக்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசின் கொள்கைகள் தான் பாரத மாதாவை இரண்டாகப் பிளக்க காரணமாக அமைந்துவிட்டன. பாரத மாதா மரணம் அடைய வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். மணிப்பூர் பற்றி விவாதிக்கவே எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மணிப்பூர் குறித்து விரிவான விளக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றே கொடுத்துவிட்டார். அங்கு அமைதியைக் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்களை விடமாட்டோம். மணிப்பூரில் அமைதி திரும்பும் என உறுதி அளிக்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'என் நண்பர் மீது தாக்குதல்'-பிரதமர் மோடி கண்டனம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 'Attack on my friend'-PM Modi condemns

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமா 'நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் 'டிரம்பிற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 'Attack on my friend'-PM Modi condemns

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியலிலும்,ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை' என குறிப்பிட்டுள்ளார்.