இந்திய அரசு ஆண்டுதோறும் தூய்மையான நகரங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கிவருகிறது. அந்தவரிசையில், இந்த ஆண்டும் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் மற்றும் மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த நகரம் தொடர்ந்து 5வது முறையாக தூய்மையான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், குஜராத் மாநிலத்தின் சூரத், இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் விஜயவாடா மூன்றாவது தூய்மையான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 100க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ள மாநிலங்களில், தூய்மையான மாநிலமாக சத்தீஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ராவும், மத்தியப் பிரதேசமும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 100க்கும் குறைவாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மாநிலங்களில் தூய்மையான மாநிலமாக ஜார்கண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவும் கோவாவும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தூய்மையான கங்கை நகரமாக வாரணாசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பீகாரின் முங்கர் மற்றும் பாட்னா தூய்மையான கங்கா நகரங்களின் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.