உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டநிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் ரஷ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைனின் கீவ்-க்குள் நுழைந்துள்ளன. இந்தச்சூழலில் உக்ரைனில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் அந்தநாட்டிலிருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களை மீட்பதற்கு மாற்றுவழிகளை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தநிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை சாலை மார்க்கமாக ருமேனியா அழைத்து வந்து, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கானப் பயணச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தெலங்கானா அரசும், உக்ரைனில் சிக்கியுள்ள தெலங்கானா மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான செலவை ஏற்க தயார் என அறிவித்தது.
இந்தநிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு விமானங்களை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும், இதற்கான செலவையும் மத்திய அரசே ஏற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.