“பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடாது” என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பரிவர்தன் யாத்திரை ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற யாத்திரையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாட (இந்தியா) மாட்டோம் என்று பிசிசிஐ நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல், ஊடுருவல் சம்பவங்களை நிறுத்தும் வரை அதனுடன் கிரிக்கெட் உறவை தொடங்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
இதனிடையே தற்போது நடைபெற்று வரும் 2023 ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்தியா, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். அதன் காரணமாக இந்தியா பாகிஸ்தானில் விளையாட வேண்டிய போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்தியாவின் இந்த முடிவிற்கு பாகிஸ்தான், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதற்கு முன்பு இருதரப்பு போட்டியில் கடைசியாக 2012 - 2013ல் விளையாடியது. அதன்பிறகு, இரு நாடுகளும் ஐசிசி போட்டிகளிலும் மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் மண்ணிற்கே சென்று இருதரப்பு தொடரில் விளையாடியுள்ளது. இதுவே இந்தியா, முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.