Skip to main content

இந்தியா- நேபாளம் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது! (படங்கள்) 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

இந்திய- நேபாள உறவு இமயமலையை போல அசைக்க முடியாதது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நேபாள பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

 

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நேபாளில் லும்பினி மாகாணத்திற்கு சென்று புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் ஷேர்பகதூர் துபாவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்த சமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காட்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் காத்மாண்டு பல்கலைக்கழகத்துக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தாகின. 

 

முதுநிலை அளவில் கூட்டுப் பட்டப்படிப்பு திட்டத்திற்காக, இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மற்றும் காத்மாண்டு பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தத்திற்கான கூட்டு விருப்பக் கடிதம் வழங்கப்பட்டது. எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த மனிஷா கொய்ராலா

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
manisha koirala meets UK PM Rishi Sunak

இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து இன்றும் லைம் லைட்டில் இருப்பவர் மனிஷா கொய்ரலா. தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா என இங்கும் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே புற்று நோயால் பாதிக்கப்பட்டு பின்பு குணமடைந்து தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஹீரமண்டி வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துள்ளார். ரிஷி சுனக்கின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது குறித்து மனிஷா கொய்ராலா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பாவது, “இங்கிலாந்துக்கும் நேபாளுக்குமான நட்பு உறவு 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக என்னை அழைத்துள்ளனர். இது எனக்கு கிடைத்த பெரிய மரியாதை. பிரதமர் ரிஷி சுனக், நேபாளை பற்றி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார். 

manisha koirala meets UK PM Rishi Sunak

மேலும் “பிரதமரின் இல்லத்தில் இருந்தவர்கள் ஹீரமண்டி வெப் தொடரை பார்த்து ரசித்ததாக தெரிவித்தனர். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது” என மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார். நேபாளைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா அரசியல்வாதி குடும்பத்தை சார்ந்தவர். இவரது தாத்தா பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா 1959 முதல் 1960 வரை நேபாளத்தின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

நேபாளம் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Nepal Earthquake; People fear due to rising death toll

 

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

 

இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.