Skip to main content

சுதந்திர தின விழா;  நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி வேண்டுகோள் 

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

Independence Day Celebration Prime Minister Modi appeals to the people of the country

 

நாட்டின் 76 - வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். இதனால் செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

அதேபோல் பிரதமர் இல்லம், குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

அந்த வகையில் சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்ற உள்ள நிலையில், அங்கும் ஏராளமான போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சுமார் 40 ஆயிரம் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

 

இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி சமூக வலைத்தள கணக்குகளில் முகப்பு படமாக (DP) தேசியக் கொடியை வைக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவரது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளில் முகப்பு படமாக தேசியக் கொடி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.