Skip to main content

அமெரிக்க கடன் பத்திரங்கள் விற்பனை அதிகரிப்பு; இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!! 

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

Increase in sales of US bonds Indian stock markets fall sharply

 

அமெரிக்காவில் பத்தாண்டு கால கடன் பத்திரங்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால், முதலீட்டாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கடன் பத்திரங்களை விற்று வருகின்றனர். கடன் பத்திரங்கள் மீதான வருமானம், பங்குகள் மீதான வருமானத்திற்கு எதிர்மறையானது என்பதால், இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் இன்றைய (பிப். 26) வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

 

அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு 1.61 மடங்கு லாபம் கிடைத்துள்ளது. இந்தியாவில் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி, நேற்றைய வர்த்தக நேர முடிவில் 15,097 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 15,000 புள்ளிகளைத் தாண்டும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று 14,888 புள்ளிகளுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. காலை 10.45 மணி நிலவரப்படி 300 புள்ளிகள் (1.98 சதவீதம்) சரிவு கண்டிருந்தது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக 14,777 புள்ளிகளும், அதிகபட்சமாக 14,919 புள்ளிகள் வரையிலும் சென்றது. 

 

தேசியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 நிறுவனங்களில், 40 நிறுவனங்களின் பங்குகள் இன்று சிவப்பு நிறத்தில் இருந்தன. 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஓரளவு ஏற்றம் கண்டிருந்தன. அதேபோல், மும்பை பங்குச்சந்தையிலும் எதிர்மறையான தாக்கம் இருந்தது. நேற்று 51,039 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுற்ற நிலையில், இன்று 1,100 புள்ளிகள் (2.06 சதவீதம்) வரை சரிவு கண்டன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 50,400 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 49,950 புள்ளிகளுக்கும் சென்றது. 

 

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 முக்கிய பங்குகளில், 24 நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன. 6 பங்குகள் கணிசமான ஏற்றத்துடன் இருந்தன. ''அமெரிக்க மத்திய வங்கி, வரும் 2023ம் ஆண்டு வரை குறைந்த விலையிலான கடன் பத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மீது கணிசமான வட்டி வருமானம் கிடைக்கும் பட்சத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது குறையும்.

 

அதனால் எதிர்காலத்தில், பங்குகளில் முதலீடு செய்வோர் ஓரளவு நல்ல நிலையில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது பலனளிக்கும்,'' என்கிறார் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவன முதலீட்டுப் பிரிவு ஆலோசகர் வி.கே.விஜயகுமார். அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் விற்பனை அதிகரிப்பும், பணவீக்கமும் உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய பங்குச்சந்தைகளில் மருந்து துறைகள் தவிர, ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், ஐ.டி., ஃபைனான்சியல் சர்வீசஸ், பொதுத்துறை வங்கிகள் ஆகிய துறைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. பங்குச்சந்தைகளின் சரிவால் இன்று, மும்பையின் தலால் ஸ்ட்ரீட் உற்சாகமின்றி காணப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்