உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் பகுதியின் லக்வாயா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவருக்கு சீமா என்ற பெண்ணுடன் திருமணமாகி வன்ஷிகா(10), அன்ஷிகா(6), பிரியான்ஷ்(3) என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜு, தனது சீமா மீது அடிக்கடி சந்தேகப்படுவதால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையில், சீமா இன்ஸ்டாகிராம் வலைத்தளப் பக்கத்தில் ரீல்ஸ்களை பதிவிட்டு வந்துள்ளார். அந்த ரீல்களில் கீழ் வரும் பல்வேறு கருத்துகளும், தெரியாத எண்ணில் இருந்து சீமாவுக்கு அழைப்புகளும் வந்துள்ளது. இதனை கண்ட ராஜு, சீமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த ராஜு, சீமாவை செங்கல்லால் அடித்துள்ளார். இதில் சீமா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
அதன் பிறகு, ராஜு, மூன்று குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி தூங்க வைத்துவிட்டு, சீமாவை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தை வீட்டிற்குள் போர்வையின் கீழ் மறைந்திருந்த மூன்று குழந்தைகளும் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, மனைவியை கொலை செய்துவிட்டு தன்னுடைய மொபைல் போனையும், மனைவியுடைய மொபைல் போனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சீமாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மகள்களின் முன்னால் மனைவையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.