தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக அவர், அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவி தனது அறையில் தனியாக இருந்தார். அப்போது, விடுதி கட்டிடத்தின் உரிமையாளரால் பணியமர்த்தப்பட்ட ஓட்டுநர் சாரதி என்பவர், பெட் சீட் கொடுக்க வேண்டும் என்று கூறி அந்த அறையை தட்டியுள்ளார். இதனை நம்பி, அந்த பெண் கதவைத் திறந்துள்ளார். திடீரென, சாரதி அந்த அறைக்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், இப்ராஹிம்பட்டினம் போலீசார், சாரதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அடுத்த நாள் தேர்வுகள் இருந்ததால், அவருடன் தங்கியிருந்த சில மாணவிகள் வெவ்வேறு அறைகளில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது. விடுதிக்குள் தனியாக இருந்த மாணவியை ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.