சி.பி.ஐ. விசாரணையில் செல்போன் பாஸ்வேர்டை சொல்லமுடியாது என கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைதுசெய்து விசாரணை செய்துவருகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பீட்டர் முகர்ஜீ மற்றும் இந்திராணி முகர்ஜீ ஆகியோரின் வாக்குமூலம் உள்ளிட்ட பல ஆதாரங்கள் கையில் உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் செல்பொன் பாஸ்வேர்ட் என்னவென்று சி.பி.ஐ. கேட்டபோது, ‘என் செல்போன் 2016ல் வாங்கப்பட்டது. வழக்கின் காலகட்டம் 2008. இரண்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை சி.பி.ஐ. பார்க்கவேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது? எனவே, நான் பாஸ்வேர்டை இதுவரை சொல்லவில்லை; சொல்லவும் மாட்டேன்’ என கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார். மேலும், தனக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.