Skip to main content

“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” - வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
I will give full cooperation to the investigation" - Brajwal Revanna released the video

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தத் தருணத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். நான் பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, எங்கிருந்தோ திரும்பி வந்து போலீசில் சரணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை.

இந்த எச்சரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால், எனது கோபத்தையும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும். அவருக்கு எதிரான விசாரணையில் என்னிடமிருந்தோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தோ எந்தவிதமான தலையீடும் இருக்காது என்பதை உறுதிசெய்வேன் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆனால் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது அவர் மொத்தமாகத் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும். என் மீது அவருக்கு மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மே 31 ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை இன்று (27.05.2024) வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கர்நாடக மக்கள் மற்றும் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்