என்னை சந்தித்து வழிபட்டால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என திருவண்ணாமலையில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த சாமியாரை காவல்துறையினர் எச்சரித்து விடுவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கெட்டிதொட்டி பகுதியில் சாமியாரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கெட்டிதொட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் அங்கு இருக்கக்கூடிய சாமியாரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வந்துள்ளனர். அந்த விசாரணையில், சாமியார் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவருக்கு இரண்டு மனைவிகளும் ஒரு மகனும் இருந்துள்ளார்கள்.
இதனிடையே, சந்தோஷ் குமார் தனது குடும்பத்தோடு ஒரு வருடத்திற்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் குடிபெயர்ந்துள்ளார். அந்த மாநிலத்தில், வனப்பர்த்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராகவும் பணிபுரிந்துள்ளார். அங்கு தன்னை சந்திக்க வருபவர்களிடம் தான் மகா விஷ்ணுவின் அவதாரம் எனவும் தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறி வந்துள்ளார்.
தான் ஒரு மனித உருவில் வந்த கடவுள் எனக் கூறி நிஜ பாம்பு தன்னுடைய படுக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி வந்துள்ளார். அதனால், தற்காலிகமாக ஐந்து தலை கொண்ட பாம்பு போன்ற கட்டிலை அமைத்து அதில் திருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்து படுத்துக்கொண்டு, தனது இரண்டு மனைவிகளும் தன்னுடைய கால்களை அழுத்தி விடும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குடும்பத்தோடு தன்னை வழிபட்டால் உடல் நலம் ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என சந்தோஷ் குமார் மக்களிடம் கூறியிருக்கிறார். இந்த செய்தி அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவி சந்தோஷ் குமாரை தரிசிக்க பலரும் வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் குமார் தன்னை தரிசிக்க வந்த மக்களிடம் அவர்களின் நோய்களைப் பற்றி விசாரித்து தரிசனம் தந்துள்ளார்.
இதனையடுத்து ஏராளமான மக்கள் சந்தோஷ் குமாரை தரிசிக்க அந்த பகுதியில் சூழ்ந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சந்தோஷ் குமார் மீது எந்த புகாரும் இல்லாததால் அவரை எச்சரித்து விடுவித்தனர் காவல்துறையினர்.