Skip to main content

லாங் ட்ரைவ் அழைத்துச் சென்று பிரபல நடிகை சுட்டுக்கொலை; இரண்டு வயது குழந்தையால் சிக்கிய கணவர்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

Husband Who Takes Long Drive and Shoots Famous Actress

 

லாங் டிரைவ் போகலாம் என மனைவியை அழைத்துச் சென்ற கணவன் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்த நிலையில், மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசில் நாடகமாடி, பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகையான ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார் யூடியூப் பிரபலமாகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பிரகாஷ் குமார் ஹவுரா போலீஸாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், “தனது மனைவி ரியா குமாரி மற்றும் தனது குழந்தையுடன் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். தடுக்க முற்பட்டபோது தன்னுடைய மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டனர். அதன் பிறகு குண்டடிபட்ட தனது மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தேன். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.” என்று போலீசாரிடம் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

 

Husband Who Takes Long Drive and Shoots Famous Actress

 

உடனடியாக மருத்துவமனைக்கு வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரகாஷ் குமாரிடம் விசாரணை நடத்தினர். தனது இரண்டரை வயது மகளை தோளில் போட்டுக் கொண்டு பரிதாபமாக பிரகாஷ் குமார் மீண்டும் நடந்தவற்றைக் கூறியுள்ளார். ஆனால், அவரை சந்தேகித்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர்களது 2 1/2 வயது மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரகாஷ் குமார் தெரிவித்த தகவல்கள் போலியானது என்பதை உறுதிசெய்த போலீசார், மீண்டும் பிரகாஷ் குமாரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது தன்னைவிட அழகாக இருப்பதாலும் அதிகம் பணம் சம்பாதிப்பதாலும் தன்னுடைய மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், இதனால் தங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரை சுட்டுக்கொல்ல முடிவு செய்தேன். இதன் காரணமாக லாங் டிரைவ் போகலாம் என அழைத்துக் கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தேன் என்றும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு பிரகாஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜார்க்கண்டில் ரயில் மோதி விபத்து; 12 பேர் பலி?

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
train incident at Jharkhand Jamtara district

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கலிஜாரியா ஹால்ட் என்ற பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றுள்ளது. அப்போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அலறித் துடித்த பயணிகள் தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக கீழே குதித்துள்ளனர். அப்போது எதிரே வந்த ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து குறித்து ஜம்தாரா துணை ஆட்சியர் ஆனந்த் குமார் கூறுகையில், “கலாஜாரியா ரயில்வே கிராசிங் அருகே ரயில் நின்று கொண்டிருந்தபோது சில பயணிகள் இறங்கி உள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு உள்ளூர் ரயில் மோதி காயமடைந்து  சிலர் இறந்ததாகத் தகவல் கிடைத்தது. இது குறித்து ரயில்வே மற்றும் மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்கு ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் கவுசிக் மித்ரா கூறுகையில், “ரயிலில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்கள் பயணிகள் அல்ல. அவர்கள் பாதையில் நடந்து சென்றவர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதி அட்வகேட் ஜெனரல் குழு (JAG) அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Next Story

“காவலர்களின் நலன் காக்க தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
DMK to protect the welfare of policemen CM MK Stalin confirmed

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று (28.02.2024) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியை முடித்திருக்கின்ற 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் 429 காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்களில் 13 பேர் பெண்கள். 429 காவல் உதவி ஆய்வாளர்களில் 74 பேர் பெண்கள். காவல்துறையில் சமூகநீதி நிலைபெற்று வருவதன் அடையாளமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

காவல் பணி என்பது ஒரு வேலை இல்லை. அது சேவை. அதை காவலர்கள் முழுவதும் உணர்ந்து பணியாற்ற வேண்டும். நேர்மையாக கடமையை செய்வதன் மூலம் மக்களுடைய நன்மதிப்பை பெறமுடியும் என்பதை காவலர்கள் மறந்துவிடக் கூடாது. நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் மட்டும்தான். காவல்துறையினரால் தங்களுடைய பணியை திறம்பட செய்ய முடியும். திமுக அரசு எல்லா தரப்பு மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதிலும் சமூகநீதியை நிலைநாட்டுவதிலும் உறுதி பூண்டிருக்கிறது.

இன்றைக்குக் காவல் பயிற்சி முடித்து பணிக்குப் போகின்ற ஒவ்வொரு அதிகாரியும் அதை உறுதி செய்கின்ற வகையில் மக்களுடைய நண்பர்களாகத் திகழ்ந்து காவல்துறைக்கும் இந்த அரசுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பொதுமக்களை நேசிப்பது. சாதி மத வேறுபாடுகளைக் கடந்து எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சட்டத்தின் முன் எல்லோரையும் சமமாக நடத்துவது. சட்டத்தை மீறுபவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவது போன்ற காரணங்களால் தான். காவல்துறையை பொதுமக்களின் நண்பன்' என்று குறிப்பிடுகிறோம் அதற்கு ஏற்றாற்போல் காவலர்கள் பணியாற்ற வேண்டும்.

காவல் நிலையத்திற்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல்துறைக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் உங்களுக்கு இருக்கின்ற பங்கை ஆற்றுவது மூலமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழ வேண்டும். தொழில்நுட்பத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி குற்றங்கள் நடப்பதற்கு எந்த விதத்திலும் அனுமதிக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நல்லாட்சியின் இலக்கணம் என்பது மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்து தருவதுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையை திமுக அரசு அமைத்துத் தந்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். குற்றமற்ற சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்ற அதே வேளையில் சட்டப் பரிபாலனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் நீங்கள் முனைப்பு காட்ட வேண்டும். ஒரு குற்றம் மறுபடியும் நடக்காமல் இருப்பதற்கான நடைமுறைகளையும் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். இத்தகைய சேவைப் பணியில் இருக்கின்ற காவலர்களின் நலன் காக்க தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும்” எனத் தெரிவித்தார்.