1000 கோடி ரூபாயில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டுள்ளீர்களா? என ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் கேட்டுள்ளார். வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ட்விட்டர் பதிவில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அவர் "இதற்கு முன் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை ஒரு வித நடுக்கத்துடன் தள்ளுபடி செய்யும். ஏனெனில் ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் அவர்களை கேள்வி கேட்கும். ஆனால் தற்போது திவால் செயல்முறையின் மூலம் வங்கிகள் எந்தவித தயக்கமும் இன்றி வங்கிகளின் கடன்களை தள்ளுபடி செய்கிறது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடன் தள்ளுபடிக்கான தீர்மானத்தை அங்கீகரித்ததால் நிறுவனங்கள் கடனில் இருந்து விடுவிக்கப்படுகிறது. வங்கிகள் இதை "ஹேர்கட்" என அழைக்கிறது. இதேபோல 517 வழக்குகளில் 5,32,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு வழக்கிற்கு 1000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. நீங்கள் 1000 கோடியில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டதுண்டா?" எனக் கூறியுள்ளார்.