Skip to main content

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

G20 summit begins today in Delhi

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும் கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லவ்ரோ, ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்