Skip to main content

தேர்தல் பிரச்சாரத்தில் இலவச கருத்தடை சாதனம்; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Free contraceptives in election campaign in andhra pradesh

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. 

இதே வேளையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும், நிர்வாகத்திறன் குறித்து தெலுங்கு தேசம் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. அதே போல், தெலுங்கு தேச கட்சியை பற்றியும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. 

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த இரு கட்சிகளும் மக்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன. அந்த பரிசுப் பொருட்களில் கருத்தடை சாதனம் இருப்பதாக இரு கட்சிகளும் குற்றச்சாட்டு வைத்து வருகிறது. அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியினர், கருத்தடை சாதன பாக்கெட்டுகளை வழங்கி பிரச்சாரம் செய்வதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட கருத்தடை சாதன பாக்கெட்டுகளை, அக்கட்சியினர் விநியோகம் செய்வதாக வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‘இறுதியாக அக்கட்சி பிரச்சாரத்திற்காக மக்களுக்கு கருத்தடை சாதனங்களை விநியோகித்து வருகின்றது. அடுத்து வயாகரா மாத்திரைகளை பகிருமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வைத்த குற்றச்சாட்டை அடுத்த இரண்டு மணி நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியும், அதே போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. அதில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட கருத்தடை பாக்கெட்டுகளை அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் விநியோகிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‘இது போன்ற கேவலமான பிரச்சாரங்களை செய்யாமல் பிணங்களுக்கு செலவு செய்யலாம்’ என்று கூறி குற்றம்சாட்டியுள்ளது. இந்த இரு கட்சியின், சின்னம் மற்றும் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட கருத்தடை பாக்கெட்டுகள் வழங்குவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், அங்கு திட்டங்கள் வகுக்கவும், நிதிநிலை சரிசெய்யவும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு அரசு, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவே கருத்தடை சாதனம் விநியோகிப்பட்டதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்