Skip to main content

போக்சோ வழக்கு; எடியூரப்பாவிடம் விசாரணை!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Former Karnataka CM BS Yediyurappa POCSO case

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவர் மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இது குறித்தும் சதாசிவ நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Former Karnataka CM BS Yediyurappa POCSO case

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சிஐடி விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அவர் முன்னாள் மாநில முதல்வர். அவர் நாட்டை விட்டா ஓடிவிடுவார்?. பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பி அவரால் என்ன செய்ய முடியும்?. உடல் நலக்குறைவு உள்ள மனுதாரரான முன்னாள் முதல்வரை கைது செய்து காவலில் வைக்கும் முடிவுக்கு நாம் உடனடியாகச் உத்தரவிட முடியாது. அதனால் ஜூன் 17ஆம் தேதி அன்று அடுத்த விசாரணை நடைபெறும். அதுவரை அவரை கைது செய்ய முடியாது’ என்று கூறி, எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிஐடி அதிகாரிகள் முன்பு இன்று (17.06.2024) காலை 10:50 மணிக்கு ஆஜரானர். இதனையடுத்து எடியூரப்பாவிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜக மத்தியில் 5 ஆண்டுகள் நிலைக்குமா என்பது கேள்விகுறிதான்? - 'இந்து' என்.ராம்! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Hindu N. Ram said question mark is whether BJP will stay in central for 5 years

இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர், பல நாடுகளுக்கு பயணித்து பத்திரிகையாளராக பணிபுரிந்தவர். மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அவர்களை நக்கீரன் சிறப்பு பேட்டிக்காக சந்தித்தோம். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் சம கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் நம்முடைய கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மூத்த பத்திரிக்கையாளரான நீங்களும், ஓய்வு பெற்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதியும் பிரதமர் மோடியிடமும், ராகுல்காந்தியிடமும் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்தீர்கள்? அதுக்கு என்ன பதில் வந்தது? எப்படி இதை செய்தீர்கள்? 

அரசியல் ஞானமுள்ள நண்பர் ஒருவர் தான் இப்படி செய்யச் சொல்லி பரிந்துரைத்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் மிகவும் தைரியமானவர், நன்றாக எழுதவும் பேசவும் கூடியவர். அவரையும் வைத்துத் தான் இந்த விவாதத்திற்கான கடிதத்தை மிகவும் கவனத்துடன் எழுதி அனுப்பினோம். மீடியா யாருக்கும் தெரிவிக்காமல் முதலில் பிரதமர் தரப்பிற்கே அனுப்பினோம். அவர்களது தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் இது குறித்து கேள்வி கேட்ட போது ராகுல்காந்தி மீடியாவிற்கும் பதிலளித்தார். எங்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார்.  பிரதமர் தரப்பிலிருந்து பதில் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படியான ஒரு விவாதத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கிராமப்புற வேலைவாய்ப்புகள், ஜி20 நாடுகளில் கீழ் இடத்தில் இருக்கிறது இது குறித்தெல்லாம் பேசியே ஆக வேண்டும் என்று நினைத்தோம்.  ராகுல்காந்தி இது குறித்து ஒரு பேசினார், பொருளாதாரத் துறையிலும், சமுதாயத் துறையிலும் நாடு சமநிலையற்ற தன்மையில் இருக்கிறது என்றார். ஆனால் இதை அப்படியே பாஜக தரப்பிலிருந்து கொச்சைப்படுத்தி, உங்களது தாலியை எல்லாம் பிடுங்கிக் கொள்வார்கள் என்று தவறாக பேசினார்கள். அசிங்கமாக நடந்து கொண்டார்கள் தான். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை. 

பல பிரதமரை பார்த்த உங்களுக்கு மோடி உடன் ஒப்பிடுகிற அளவிற்கு வேறு யாரேனும் தலைவர்கள் இருக்கிறார்களா? 

இவர் ஒரு புது மாதிரியான ஆளாக இருக்கிறார். 18 வருடங்களாகவே தனிப்பட்ட முறையிலேயே தெரியும். போன் பண்ணுவார், தமிழகம் வந்தால் பார்ப்பார். நிறையா விசயங்கள் குறித்து பேசுவோம். மாநில உரிமைகள் குறித்து கூட முதல்வராக இருந்த போது குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் பிரதமர் ஆனதுமே முழுமையாக மாறி விட்டார். தலைமை பொறுப்பிற்கு வந்ததுமே அமித்ஷாவை வைத்து பழைய பாஜக தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, போன்றோர்களை ஓரங்கட்டினார். 

நீங்க குறிப்பிட்ட தலைவர்களுடன் பாஜகவில் சுஷ்மா சுவராஜ், பிரமோத் மகாஜன் போன்றவர்களெல்லாம் முன்னால் இருந்தார்கள். இப்போது அப்படியான அடுத்தகட்ட தலைவர்கள் இருக்கிறார்களா? 

நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் எல்லாரும் இருக்காங்க, ஆனால் அவங்க எல்லாருக்கும் மோடி மீது முரண்பாடு இருக்கிறது. அமித்ஷா கூட இருக்காரு, ஆனால் இந்த முறை அவரையுமே பெரிதாக கண்டுகொள்ளாதது போல் தான் மோடி நடந்து கொள்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. வேற தலைவர்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஆனால் மோடி அளவிற்கு அவங்க ஆதிக்கம் செலுத்த முடியாது. 

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு யோகி-மோடி முரண் எதாவது காரணமாக இருக்குமா?

மாநில ஆட்சியில் யோகி ஆதித்யநாத் மீது எந்த விமர்சனமும் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால் அமித்ஷாவிற்கு பிடிக்காததால் யோகி கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார். இவர்களை விட மோசமான இந்துத்துவவாதி அவர், ஆனால் தலைமையில் ஒத்துழைப்பு இல்லாததால் எலெக்சன் ரிசல்ட் அப்டி வந்திருக்கிறது. முன்னெல்லாம் பாஜகாவில் நிறையா பேர் அடுத்தடுத்த இடத்தில் இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த கட்சியைப் பொறுத்தவரை மோடியின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் கூட்டணி ஆதரவோடு ஆட்சி அமைக்கிறவர்கள் ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்வார்களா? அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் நடைபெறுமா?

பாஜக முந்தைய ஆட்சியைப் போல மாநிலங்களை நசுக்குதல் வேலையை செய்ய முடியாது. ஆளுநரைக் கொண்டு அங்கு சிக்கலை உண்டாக்க முடியாது, குறிப்பாக தமிழக ஆளுநர் மாநில திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடுப்பதும் பிறகு உச்சநீதிமன்றத்தில் திட்டு வாங்குவதுமாக இருக்கிறார். இனிமேல் அப்படியெல்லாம் செய்ய முடியாது தான். சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்களுடைய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் நிலைக்குமா என்பது கேள்விக்குறி தான். நிலைக்குமா? நிலைக்காதா? என்று ஜோசியம் சொல்ல முடியாது.  சொந்த கட்சியில் கூட யாரையும் தலைதூக்க கூட விடாத அளவுக்கு பார்த்துக் கொள்கிற மோடி, இவ்விருவரின் விசயத்தில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்வார்தான் என்று நினைக்கிறேன். 

காங்கிரஸ் கட்சியினர் இந்த தேர்தல் மூலமாக ஆட்சி அமைக்காவிட்டாலும் அதை ஒரு ஒரு வெற்றியாக நினைத்துக் கொள்ளலாமா?

வெற்றி தோல்வி என்பது அரசியல் அதிகாரத்தை வைத்து மட்டுமே முடிவெடுக்க கூடாது. அவர்களுடைய குறிக்கோள் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் படிப்படியாக பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். அதை ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் எனலாம். பாஜகவினர் காங்கிரஸை வெற்றி பெறவில்லை கொச்சைப்படுத்துகிறார்கள். அதெல்லாம் அரசியலில் நடப்பது தான். ஆனால் காங்கிரஸில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது கூட காங்கிரஸிற்கு பின்னடைவை உருவாக்கி இருக்குமோ?

சமீபத்தில் சரத்பவார் உடன் பயணித்துக் கொண்டிருந்த போது சொன்னார். முந்தைய காலகட்டங்களில் எல்லாம் கூட பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் வேலை செய்திருக்கிறோம். வாஜ்பாயி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய தேர்தலில் கூட எதிரே யார் என்று கேள்விக்குறியை வைத்து செய்த பிரச்சாரம் வென்றது. பத்து வருடங்கள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த முறையும் அப்படித்தான் முயன்றோம். ஆனால் இந்த முறை சோனியாகாந்தியை அறிவித்து இருந்திருக்கலாம் என்றார். 

சரத்பவார், மம்தா பேனர்ஜி எல்லாம் காங்கிரஸிலிருந்து வெளியே வந்தவர்கள் என்பதால் ராகுல்காந்தியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களா?

அப்படி இல்லை, சரத்பவார் ஏற்றுக் கொள்வார். கார்கேவை கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டாலும் அவரே ராகுல்காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று சொன்னவர். ஆனால், ராகுல்காந்தியோ தன்னைத்தான் எல்லோரும் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டிமாண்டை வைக்காத சிறந்த தலைவர். 2019-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பொறுப்பிலிருந்து விளகியவர். களத்தில் இறங்கிட்டாருன்னா தயக்கமில்லாமல், தைரியமாக வேலை செய்வார்.  ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்து சின்ன பையனாக இருந்த ராகுல்காந்தியை பார்த்து வருகிறேன். அவர் தன்னை உருவாக்கிக் கொண்ட விதம் என்பது தனித்துவமானது தான்.

இந்த ஆட்சி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதலாவதாக ஐந்து ஆண்டுகள் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆர்.என்.ரவியை வாபஸ் வாங்க வேண்டும். நிதித்துறையில் நெருக்கடி தராமல் மாநிலங்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மாநில தலைமைகளை நசுக்க கூடாது. பத்திரிகை சுதந்திரத்தை பேச்சு எழுத்து சுதந்திரத்தை தாக்குவதை நிறுத்தணும். நிறுத்தா விட்டால் போராட்டம் நடக்கும். எலெக்சன் கமிசன் நேர்மையாக செயல்பட வேண்டும். வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பாகிஸ்தான் உடன் நல்லுறவை பேண வேண்டும். காஸாவில் நடக்கும் கொடுமைகளை கண்டிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.  

தேர்தலுக்கு பிறகான இந்த கருத்துக்கணிப்புகள் எப்படித்தான் எடுக்கப்படுகிறது? 

தேர்தல் நடக்கும் இடத்திற்கே தற்காலிக தன்னார்வலர்களை நியமித்து அவர்களைக் கொண்டு வாக்களித்து வருகிறவர்களிடம் கேட்டு அதனைக் கொண்டு ஒரு தரவினை உருவாக்கி கணிப்பாக வெளியிடுவார்கள். அது சரியாகவும் இருக்க கூடும், தவறாகவும் இருக்கக்கூடும். இந்த முறை கருத்துக்கணிப்புகள் தேர்தலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் மக்களை உளவியல் ரீதியாக பாதித்தது. அதே சமயத்தில் பங்குச்சந்தையையும் பாதித்தது. 

Next Story

தமிழக பாஜக தலைவரின் லண்டன் மர்மம் ! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Tamil Nadu BJP President to go to London

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி தலைமை தொகுதி வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என சொல்லப்படும் நிலையில், 5 மாதம் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும், மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தான் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 5 மாதங்களில் தமிழக பாஜக தலைமையில்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்வி கட்சியின் மேல் மட்டத்தில் எழுந்திருக்கிறது. 

அதேசமயம்,  தலைமையில்லாமல் இருக்கும் அந்த 5 மாதங்களும் பாஜகவை  வழிநடத்த உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக தலைவர் சென்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கிடைத்த 500 ஸ்வீட்ஸ்  பாக்ஸ்களை லண்டனில் பயன்படுத்தவும் இந்த படிப்பு பயணத்தில் திட்டமிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் பரவியுள்ளது.