Skip to main content

“மது ஆறு அல்ல; புதுச்சேரி மது கடலாக மாறிவிடும்..” - முன்னாள் முதல்வர்  நாராயணசாமி

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Former Chief Minister  Narayanasamy condemn for Alcohol

 

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே  ஏராளமான மதுபானக் கடைகள் உள்ள நிலையில், புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சாமிப்பிள்ளை தோட்டத்தில் காமராஜர் மணி மண்டபம் அருகே புதிய மதுபானக் கடை அமைக்க புதுச்சேரி அரசும், கலால் துறையும் அனுமதி அளித்துள்ளது. பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான இக்கட்டடம் உள்ள பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். புதிய மதுபானக் கடை திறக்க கட்டுமான பணிகள் முடிந்து கடை திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

புதிய மதுக்கடை வரும் பகுதியில் பிரசித்தி பெற்ற கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் நிறைய குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழு ஒன்றை அமைத்து, அந்த மதுபானக் கடையை திறக்க அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காமராஜர் மணிமண்டபம் அருகே ஒன்று கூடி புதிய மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதன் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த லெனின்.துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், பா.ம.க மாநில அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சேது.செல்வம், தமிழர் களம் மாநில அமைப்பாளர் அழகர் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் மதுபானக்கடை கொண்டுவரக்கூடாது என்று வலியுறுத்தியும், மதுபானக்கடைக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மக்கள் முழக்கங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர். அப்போது ஒரு கட்டத்தில் அப்பகுதி பெண்கள் மதுக்கடை திறக்க உள்ள பகுதியை நோக்கி சென்றபோது போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் 350-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டீக்கடையில் கூட மதுபானங்கள் விற்க அனுமதி அளிக்கப் போவதாக தெரிகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. புதிதாக 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க உள்ளனர். ஏற்கனவே ஓடும் மதுபானம் ஆறு., இனி மது கடலாக மாறிவிடும். பெண்களின் போராட்டத்தின் மூலம்தான் மதுக் கடைகளை அகற்ற முடியும். அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.