/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mic-art.jpg)
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் தொடர்பாக டெல்லியில் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உயர்நிலைக் கூட்டத்தில் தமிழகத்தின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்திற்கு பிந்தைய நிலவரம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)