Female doctor found in hospital west bengal

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், அரைநிர்வாணமாக சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண் மருத்துவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அந்த பெண் மருத்துவரின் உடலில் காயங்கள் இருந்ததால், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், அந்த பெண் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் இவர் நேற்று முன் தினம் (08-08-24) அரசு மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

இந்த நிலையில், பெண் மருத்துவருக்கு நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளிவந்துள்ளது. அதில், இறந்து கிடந்த பெண் மருத்துவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடையே, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தி ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.