Skip to main content

விவசாயிகள் பேரணியில் வன்முறை - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

supreme court

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், நேற்று (26.01.2021) ட்ராக்டர் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.

 

இந்நிலையில் விவசாயப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சுதந்திரமான ஆணையம் ஒன்றை அமைத்து, டெல்லியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கும், பொது சொத்திற்கு சேதம் ஏற்பட காரணமாகவும், தேசிய அவமானத்திற்கு காரணமாகவும் விளங்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எனது மனுவை உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.