கேரள முதல்வரைச் சந்திக்க வேண்டும் என அடம்பிடித்த சிறுவனின் வீடியோ முகநூலில் வைரலானதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த சிறுவனுக்குக் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசினா ரஞ்சித் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவரது மகன் ஆதி முகத்தை வீடியோவில் காட்டாமல் அழுது, அடம்பிடித்துக் கொண்டிருந்தான். தொடர்ச்சியாக நான் கேரள முதல்வரைச் சந்திக்க வேண்டும் என அந்த சிறுவன் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில், பினராயி விஜயன் அடுத்த முறை கேரளா வரும்பொழுது அவரைச் சந்திக்கலாம் என ரசினா சமாதானம் செய்கிறார்.
இந்த வீடியோ முகநூலில் வைரலானதை அடுத்து, அது கேரள முதல்வர் பினராயி விஜயனின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து ரசினாவின் தொலைபேசிக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பில், கூடிய விரைவில் முதல்வரோடு ஆதி சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பினராயி விஜயனின் பக்கவாட்டில் ஆதி அமர்ந்திருப்பது மாதிரியும், பினராயி விஜயனை ஓவியமாக வரைந்து ஆதி அவருக்கு பரிசளிப்பது மாதிரியும் புகைப்படங்களை ரசினா ரஞ்சித் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கண்ணூர் மாவட்ட சிபிஎம் செயலாளர் ஜெயராஜன் உடனிருந்தார்.