Skip to main content

அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் 62 லட்சம் இழந்த முன்னாள் ராணுவ வீரர்!

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

Ex-soldier who lost 62 lakhs online in the desire for more profit!

 

புதுச்சேரி முருங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 56). முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலமாக சம்பாதிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என தனது செல்போனில் தேடி உள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போலி நிறுவனத்திலிருந்து ஒரு லிங்க் அழைப்பு வந்துள்ளது. 

 

அதில் 'முதலீடு செய்யும் பணத்திற்கு 20% அன்றைய தினமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும். முதல் முறை முதலீடு செய்யும் பணத்திற்கு ஈடாக நாங்களும் நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ அதே அளவு பணம் போனசாக தருவோம், எங்களிடம் பிளாட்டினம், ப்ரீமியம் ஸ்பெஷல் போன்ற பல்வேறு முதலீட்டு பிரிவுகள் உள்ளது' என்றும் கூறியுள்ளனர்.

 

இதனை நம்பிய முருகன், கடந்த ஜனவரி மாதம் ரூபாய் 10,500 முதலீடு செய்துள்ளார். அவர்களும் அதற்கு ஈடாக 10,500 பணத்தைப் போட்டு அன்றைய தினமே 30 வீடியோக்களை அனுப்பி உள்ளனர். அதை பார்த்து ரிவ்யூ (கருத்து) சொல்ல வேண்டும் என்றும், ரிவ்யூ சொன்ன உடன் ரூ.22,000 வரை அவரது வங்கி கணக்கில் பணம் அனுப்பி உள்ளனர். அதனால் இதை முழுமையாக நம்பி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூபாய் 32 லட்சம் அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை முதலீடு செய்துள்ளார். 

 

இந்த பரிமாற்றங்களின் மூலம் அவருடைய செல்போனில் அவர் சம்பாதித்த லாபத்தையும் சேர்த்து அவரது கணக்கில் ரூபாய் 58 லட்சம் பணம் இருப்பதாக அந்த செயலியில் காட்டியுள்ளது. அந்த பணத்தை அவர் எடுக்க முயன்ற போது உங்களுக்கு எர்ரர் காட்டுகிறது என்றும், இதற்கு நீங்கள் வரி கட்டினால் தான் மேற்கண்டு பணத்தை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதற்கு வரி கட்டுவதற்காக அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் இருப்பதாக காட்டியுள்ளது. அந்த பணத்தை எடுக்க மேலும் வரி செலுத்த வேண்டும் என்று கூறியதால் தன்னிடம் இருந்த பணம், நகை, கடன் தொகை என அனைத்தையும் முதலீடு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் 62 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனாலும் அவரால் அவரது கணக்கில் இருக்கின்ற பணத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன், புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அம்பலமான உண்மை; பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது மோசடி வழக்கு

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Fraud case against trainee IAS officer Pooja Ketkar

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக்  கூறப்பட்டது. மேலும்,  புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. 

பூஜா கேட்கர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், ஓய்வு பெற்ற மகாராஷ்டிரா அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை திலீப் கேத்கர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. பூஜா கேட்கர் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. 

இதனையடுத்து, பூஜா கேட்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, சாலையோர நடைபாதையை பூஜாவின் குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, புனே நகராட்சி சார்பில் அனுப்பிய நோட்டீஸூக்கு பூஜாவின் குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால்  பூஜாவின் ஆக்கிரமிப்பு தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், நில விவகாரம் தொடர்பாக புனே மாவட்டம் தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை, பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோதத் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே போலீசார், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை கைது செய்துள்ளனர். 

இந்தநிலையில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், கையெப்பம், புகைப்படம், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி  மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவர் மீது போலீசில் மோசடி வழக்குத் தொடுத்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு பூஜா கேட்கருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Next Story

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு; காவல்துறையினருக்கு நீதிமன்றம் கெடு!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Court time for the police for Neo Max Fraud Case

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆகின. 

இந்த வழக்குகள் அனைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தண்டபானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘நிதி நிறுவனங்களில் ஆசை வார்த்தையை நம்பி 3.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், 11,709 பேர் மட்டுமே தங்களுடைய முதலீட்டுகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். தங்களிடம் முதலீடு செய்தவர்களின் விபரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் ஆகிய முழு விவரங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வழங்க வேண்டும். 

அதே போல், பாதிக்கப்பட்டவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக முழுவதுமாக அறியும் வகையிலும், மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும் விதமாகவும் பரந்த அளவில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெறுவதில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முனைப்பு காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து புகார்களை பெற்று, இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து 15 மாதங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.