டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்திருந்தது.
இது தொடர்பாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். சுமார் 9 மணி நேரம் இந்த சிபிஐ விசாரணை நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் தற்போது வரை சிறையில் உள்ளனர். இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அமலாக்கத்துறை குறிப்பிட்ட காலத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் நவம்பர் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.