Skip to main content

“18 மாதங்களாக சம்பளம் இல்லை” - போராட்டத்தில் இறங்கும் சந்திரயான்-3க்கு உதவிய ஊழியர்கள்

 

Employees of Heavy Engineering Corporation were not paid

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியில்  நீர் - பனி வளங்கள் குறித்து ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்தது. தொடர்ந்து ரோவர் தனது பணியினை வெற்றிகரமாக முடித்துவிட்டது என இஸ்ரோ தெரிவித்தது. பின்னர், ரோவரை இஸ்ரோ உறங்கும் நிலையில் வைத்திருப்பதாகவும் கூறியது.

 

ராஞ்சியைச் சேர்ந்த ஹெவி இன்ஜினியரிங் கார்பரேஷன்(எச்.இ.சி) என்ற நிறுவனம் சந்திரயான்-3ன் உதிரி பாகங்களைச் செய்ய உதவியது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய எச்.இ.சி மஜ்தூர் யூனியன் தலைவர் பவன் சிங்க், “கடந்த 18 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால், செப்டம்பர் 21 எச்.இ.சி ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு போராடவுள்ளோம். மேலும், சந்திரயான்-3இன் மாதிரி வடிவத்தையும் கொண்டு வந்து மக்களிடம் காட்டவுள்ளோம். பின்னர், லூனார் மிஷனில் எங்கள் ஊழியர்களின் பங்கு இருந்ததை மத்திய அரசிற்கு நினைவுபடுத்த இருக்கிறோம். சந்திரயான்-3க்கு பயன்படுத்தப்பட்ட இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தின் சில பகுதிகளை எங்கள் ஊழியர்கள் உருவாக்கியுள்ளனர். மேலும், 400/60 இஒடி (மின்சார மேல்நிலைப் பயணம்) கிரேன், 200/30டி இஒடி கிரேன், 10 டன் சுத்தியல் டவர் கிரேன், ஃப்சிவிஆர்பி (மடிக்கக் கூடிய அதே சமயம் செங்குத்தாக மாற்றியமைக்கக்கூடிய தளம்), இடது-வலது பக்கம் நகர்த்தக் கூடிய கதவு மற்றும் இஸ்ரோவின் மொபைல் லான்சிங் பீடத்தையும் உருவாக்கியுள்ளனர்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியில் நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு சில எம்.பி.க்களையும் அழைத்திருக்கிறோம். ஆனால், அதில் பாஜக மற்றும் அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்கத்தின் எம்.பி.க்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தெரிகிறது. ஏனென்றால், அவர்களால் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாது. மேலும், நாங்கள் ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். எங்களுடன் போராட்டத்தில் பங்குபெற கேரள சிபிஎம், எம்.பி. இளமரம் கரீம் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். அவர் இம்மாத தொடக்கத்தில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு சம்பளம் வழங்கப்படாமல் பட்டினியின் விளிம்பில் இருக்கும் 2,800 ஊழியர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டி கடிதம் எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து, மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் தர்ணாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

 

ஏற்கனவே இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது, இந்த 18 மாத சம்பளப் பாக்கி விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !