Skip to main content

அந்தமான் அருகே நிலநடுக்கம்!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
 Earthquake near Andaman

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டிருந்தது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத் தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. கேம்ப்பெல் பே இல் என்ற இடத்திலிருந்து 487 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் உள்ள அலிபுர்துவார் என்ற இடத்தில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவில் பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பிற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்டினலை அடுத்த சோம்பன்; வாக்களிக்க வைத்த தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Somban next to Sentinel; The Election Commission held the vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமல்லாது அந்தமான் தீவிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக அந்தமான் தீவில் மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவது சென்டினல் மற்றும் சோம்பன் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்தமானில் வடக்கு சென்டினல் தீவு பகுதிக்குச் சென்ற 26 வயது மத போதகர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .தற்போதுவரை அவரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை.  சென்டினல் மக்கள் வெளி உலகத் தொடர்புக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை அணுகும் மக்களை அவர்கள் கொடூரமாக கொள்வது வழக்கம்.  வெளி உலக தொழில் நுட்பங்கள், வெளி மனிதர்களின் கலாச்சாரம் ஆகியவை எதுவும் தற்போது வரை சென்டினல் மக்களைச் சென்றடையவும் இல்லை. மீறி எடுத்துச் சென்றால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை.

அடர்ந்த காட்டில் தனிமையாக வாழும்  அந்தப் பழங்குடியின மக்களின் மக்கள் தொகையே 80 தான் என்று சொல்லப்படுகிறது. சென்டினல் போன்றே அந்தமானில் மற்றொரு பழங்குடியின இனக்குழுவும் உள்ளது. அதன் பெயர் சோம்பன். இந்தக் குழுவில் மொத்தம் 229 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்  சோம்பன் மக்களிடம்  வாக்களிப்பதின்  அவசியத்தை  உணர்த்தியிருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட்டு போட வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்த நிலையில், 229 பேரில் ஏழு சோம்பன் பழங்குடியின மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதனை வரலாற்றுச் சாதனை என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.