Skip to main content

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 3- வது முறையாக உயர்வு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

domestic gas cylinder price hike peoples

 

ஒரே மாதத்தில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 828 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்துகொள்ள எண்ணெய் நிறுவன கூட்டமைப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கேஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. 

 

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமல்லா எல்பிஜி சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான நடைமுறையை மீறி 4- ஆம் தேதியன்று நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று 25 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 710- ல் இருந்து 735 ரூபாயாகவும், சேலத்தில் 728- ல் இருந்து 753 ரூபாயாகவும் அதிகரித்தது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இதன் விலை 719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 

 

அப்பாடா... இத்துடன் விலையேற்றம் முடிந்து போனது என்று நடுத்தர வர்க்கத்தினர் பெருமூச்சு விட்டிருந்த நிலையில், திடீரென்று பிப். 15- ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 753- ல் இருந்து 803 ரூபாயாக உயர்ந்தது. சென்னையில் 735- ல் இருந்து 785 ரூபாயாக அதிகரித்தது. 

 

திடீர் திடீரென்ற கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக வியாழனன்று (பிப். 25) எல்பிஜி சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 803- ல் இருந்து 828 ரூபாயாகவும், டெல்லி, மும்பையில் 794 ரூபாயாகவும், கொல்கத்தா நகரில் 820.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

 

அதேநேரம், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலையைக் கடந்த மாதத்தைக் காட்டிலும், பிப்.25- ஆம் தேதியன்று, 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் பிப். 1- ஆம் தேதி, வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை தடாலடியாக 191 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டு தவணைகளில் மொத்தம் 24 ரூபாய் விலை குறைத்துள்ளனர். 

 

மேலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் மூன்று தவணைகளில் மொத்தம் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, அனைத்து தரப்பு மக்களையும் பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.