Skip to main content

"தயவுசெய்து ஹெலிகாப்டர் ஷாட்டை மட்டும் கற்றுக் கொடுங்கள்" -சுஷாந்த் சிங் குறித்து தோனியின் சிறுவயது பயிற்சியாளர் உருக்கம்...

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

dhoni coach about sushant singh rajput

 

எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுஷாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். அதன்பின் தொலைக்காட்சி தொடரிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமடைந்த சுஷாந்த் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திலிருந்ததாக கூறப்படும் சுஷாந்த் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் “தோனி” படத்தில் அவர் நடிக்கையில் நடந்த சம்பவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி.

சுஷாந்த் இறப்பு குறித்துப் பேசியுள்ள அவர், “சுஷாந்த் மிகவும் மென்மையானவர். அனைவரிடமும் நன்றாகப் பழகுவார். அவர் உயிரிழந்த செய்தியைப் பார்த்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அவர் ராஞ்சிக்கு வந்தபோது நாங்கள் நிறைய பேசினோம் அரட்டை அடித்தோம். தோனியின் நண்பர்களும் அப்போது உடனிருந்தனர். அவர் எப்போதும் என்னிடம், தயவுசெய்து தோனியின் ஹெலிகாப்டர் சாட்டை மட்டும் எப்படியாவது எனக்கு கற்றுக் கொடுங்கள் என்பார். இன்று எனக்கு அவரது நினைவுகள் மட்டுமே உள்ளது. நான் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.