Skip to main content

“பெண் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்” - புதுச்சேரி முதல்வர் 

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

 deposit 50 thousand on birth of girl child will be implemented soon says Puducherry cm

 

புதுச்சேரி நகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான வங்கிகளின் குழுமம் சார்பில் பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதி கடன் முகாம் கம்பன் கலையரங்கில் நடந்தது. குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் தலைமை தாங்கினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமத் தலைவர் குமார் துரை வரவேற்றார். இம்முகாமை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து சாலையோர கடை வியாபாரிகளுக்கு கடனுதவிக்கான ஆணையை வழங்கினார். 

 

பின்னர் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “ஏழை - எளிய மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நிறைய திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பர் நிதி திட்டம். சாலையோர கடை வியாபாரிகளுக்கு ஆரம்பத்தில் சிறிய முதலீடு தேவைப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனை பிரதமர் உணர்ந்துதான் வங்கிகள் மூலம் இந்த கடனுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

 

புதுச்சேரியில் நிறைய சாலையோர கடைகளில் வியாபாரம் நடக்கிறது. சாலையில் செல்வோருக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும் வியாபாரம் செய்ய வேண்டும். புதுச்சேரியில் கடந்த முறை 1,567 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் 608 பேர் தான் சரியாக கடனை செலுத்தி, 2வது முறையாக ரூ.20 ஆயிரம் கடனுதவி பெற்றுள்ளனர்.  வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான் மேலும், மேலும் வங்கியில் கடனுதவி பெற்று வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

 

புதுச்சேரி அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சுமார் 70 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கின்ற நிலையில் இத்திட்டம் செயல்படவுள்ளது. பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக் கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டமும், எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 300 மானியம் ஆகிய திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த உள்ளோம். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.66 கோடி ஆரம்பத்திலேயே ஒதுக்கி கொடுத்துள்ளோம். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு கவனமாக செயலாற்றி வருகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணிக்கிறேன்” - அதிமுக வேட்பாளர் ஆவேசம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"I will boycott the election" - AIADMK candidate's obsession

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார். 

Next Story

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Election campaigning in Tamil Nadu ends with evening

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

அதே சமயம் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.