Skip to main content

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் பாராட்டு!

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Delhi Tamil Bar Association praises ISRO scientists

 

இஸ்ரோ விஞ்ஞானிகள் வீரமுத்து வேல் மற்றும் நிகர் ஷாஜி ஆகியோர் இன்று டெல்லி சென்றிருந்தனர். இவர்களை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா நேரில் சந்தித்தார். அப்போது தமிழ் உலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் போற்றும் இடத்தில் தமிழ் விஞ்ஞானிகள் இருவரும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக இருவரையும் பாராட்டினார். மேலும் அவர்களின் பங்களிப்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

 

இந்திய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மிகப்பெரிய இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் தமிழர்கள் ஆவர். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 என்ற விண்கலமும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற விண்கலமும் உருவாக, நடைமுறைப்படுத்த, வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவிற்கு இவர்கள் இருவரும் இயக்குநர்கள் ஆவர். இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஞ்ஞானி நிகர் ஷாஜி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் இது பெருமை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் இப்போது முன்னிலை பெற்றுள்ளதற்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது.

 

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 விண்கலங்கள் இந்தியாவையும் இந்தியப் பொருளாதாரத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் அதிக பலன்கள் தரும் என்றும் இருவரும் கூறினர். உலக நாடுகள் இந்தியாவின் இந்த இரண்டு சாதனைகளை உற்று நோக்கிப் பார்த்து வருவதாகவும் நமது விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்கள். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் சந்திரனுக்கு சென்றுள்ள சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மண் மற்றும் இதர கனிம வளங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வழங்கும் என்று கூறினார். அதேபோல் சூரியனுக்கு சென்றுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வட்டப் பாதைகளை ஆராய்ந்து, அதன் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து உலக வெப்ப மயமாதல் போன்றவற்றை ஆராய்ந்து சொல்லும் என்று நிகர் ஷாஜி கூறினார்.

 

தமிழகத்தின் இந்த இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்யவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மேலும் உயர டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ராம் சங்கர் பாராட்டினார். அவருடன் டெல்லி தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தனும் கலந்து கொண்டு டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Notification of date for consultative meeting of 'India' alliance
கோப்புப்படம்

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதே சமயம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்தில் மிஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளின் 4 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

அடுத்த அப்டேட் கொடுத்த ஆதித்யா எல் - 1 விண்கலம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
The next update was the Aditya L-1 spacecraft

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் முதல் முறையாக இஸ்ரோ சார்பில் அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சூரியனைச் சுற்றியுள்ள குரோமோச்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பிய படத்தை இஸ்ரோ கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.