பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 18- க்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனித்தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உருமாறிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரிட்டனுக்கான விமான சேவை மற்றும் உலக நாடுகளில் இருந்து இந்தியா வரும் வர்த்தக விமானங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கரோனா உறுதியாகும் பயணிகளின் மாதிரிகளை புனே, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
தேவைப்பட்டால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கலாம்; இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்; கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருந்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இருந்த நிலையில், டெல்லி மற்றும் கேரள மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளன.
அதன்படி, டெல்லியில் இன்று, நாளை என இரண்டும் நாட்களும் இரவு 11.00 மணி முதல் காலை 06.00 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், டெல்லியில் இரண்டு நாட்களிலும் இரவு நேர ஊரடங்கின்போது பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கேரள மாநிலத்தில் இன்று இரவு 10.00 மணிக்கு மேல் எந்த கொண்டாட்டங்களும் நடைப்பெறக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.